×

ஒரே நேரத்தில் ஆறுக்கும் மேலான ஓவியங்கள்… அசத்தும் ராஜாசென்னா!

ஒருவர் ஒரு கையில் ஓவியம் வரையலாம், அதிகபட்சம் இரண்டு கைகளில் ஒரே நேரத்தில் ஓவியம் வரையலாம், எழுதலாம். ஏன் ஒரே நேரத்தில் இரண்டு கைகள், இரண்டு கால்களில் எழுத முயற்சிக்கும் ‘நண்பன்’ படத்தின் வைரஸ் பிரின்சிபல் சத்யராஜ் வரை கூட பார்த்துவிட்டோம். ஆனால் நெதர்லாந்தைச் சேர்ந்த ராஜாசென்னா என்னும் பெண். ஒரே நேரத்தில் இரண்டு கைகள், இரண்டு கால்களில் வரைவதோடு ஒரே நேரத்தில் ஆறுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைகிறார். அவரது வீடியோக்கள், ரீல்ஸ்கள் என அனைத்தும் டிரெண்டிங்கில் ஆச்சர்யம் உண்டாக்குகின்றன.நெதர்லாந்தில் பிறந்த ராஜாசென்னா மழலை மாடலாக 4 வயதில், பல்வேறு டச்சு நிறுவனங்களுக்கு மாடலிங் செய்யத் தொடங்கியிருக்கிறார். 5 வயதில் ஒரு டச்சு டிவி-ஷோவில் தோன்றும் வாய்ப்பு வரவே ஒரு பக்கம் டிவி நிகழ்ச்சிகள், மாடலிங் இன்னொரு பக்கம் பள்ளிப்படிப்பு என ஒரே நேரத்தில் அப்போதே பன்முகத் திறமைக் கொண்டவராக இருந்துள்ளார். அதன் பிறகு அவர் சீரியல்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சில வேடங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். 12 வயதிருக்கும் போது குழந்தைகளுக்கான முதல் வெப் டிவியின் தொகுப்பாளராகத் பணியாற்றத் தொடங்கினார். அவரது நிகழ்ச்சிகளை உள்ளூர் ஏரியா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினர். அந்த நிகழ்ச்சிதான் ராஜா சென்னாவுக்கு பல பரிமாணங்களை உருவாக்கியிருக்கிறது. அந்த நிகழ்ச்சி மூலம் அவர் பல பிரபலமான சீரியல், சினிமா, அரசியல் நபர்களை நேர்காணல் செய்யத் துவங்கினார். பில் காலின்ஸ், டேவிட் ஃபாஸ்டினோ, கென் கெர்செவல் மற்றும் லோரென்சோ லாமாஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற நபர்களும் அதில் அடக்கம்.

16 வயதிருக்கும் போதுதான் ஓவியப் பதிப்பகம் ஒன்று அவரின் இன்னொருத் திறமையை வெளிகொண்டு வந்தது. இயற்கையிலேயே ராஜா சென்னா நல்ல ஓவியர், ஓவியர் என்றால் வெறும் ஓவியரல்ல, அச்சு அசல் புகைப்படம் போல் ஓவியம் வரையக் கூடிய திறன் பெற்றவர் ராஜா. அந்தத் திறனுக்கு அமெரிக்க பதிப்பகம் ஒன்று வாய்ப்பளித்து அவரின் ஓவியங்களை பிரசுரித்தது. அவர்களே அவர் வரையும் வீடியோக்களையும் ஒவ்வொன்றாக வெளியிட ராஜா சென்னாவின் புகழ் எங்கும் பரவத் துவங்கியது. 16 வயதில் அவருக்குள் இருக்கும் இயற்கையான மூளைத் திறனும் கண்டறியப்பட்டது. இதனை ‘நாற்கர பயன்பாடு’ என்பர், அதாவது ஒரே நேரத்தில் இரண்டு கைகள், கால்கள் என பயன்படுத்தக்கூடிய வகையில் மூளையின் செயல்பாடு இருக்கும்(quadridextrous- ambidextrous 4-limbed multi drawing/painting artist.). அந்த நபர்களில் இவர் உலக அளவில் முக்கிய இடம் வகிக்கிறார். உலகின் நம்பர் ஒன் நரம்பியல் வல்லுனர் கொடுத்திருக்கும் சான்றிதழ்படி ராஜா சென்னா வரையும் தருவாயில் கிட்டத்தட்ட ஐன்ஸ்டீன் மூளை செயல்பாடு எப்படி இருந்ததோ அப்படி இருப்பதாகச் சொல்கிறார். பில் ஸ்காட் உட்பட உலகின் முன்னணி நரம்பியல் வல்லுனர்கள் கொடுத்த ஆய்வு முடிவில் ‘சூப்பர் மனிதருக்கான அத்தனை செயல்பாடுகளும் கொண்ட மூளையாக ராஜாசென்னா மூளை இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஹைப்பர்-ஃபோட்டோரியலிஸ்டிக் வரைபடங்களை வரைவதில் இயற்கையாகவே திறமை பெற்றுள்ள ராஜா சென்னா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், வானொலி மற்றும் ஜப்பானிய தொலைக்காட்சிகளில் கூட பங்குபெற்று பிரபலமாகிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் குழு அவரிடம் புரமோஷனல் ஓவியம் வரைந்துத் தரும்படிக் கேட்டனர். அதன் விளைவு இன்று பல நிகழ்ச்சிகள், பிரபலங்கள் என எங்கும் ராஜாசென்னா புரமோஷனல் வீடியோக்கள், விளம்பர ஓவியங்கள் வரைந்து மில்லியன்களில் வருமானம் ஈட்டி வருகிறார். 2015 ஆம் ஆண்டில், பாடகர்-பாடலாசிரியர் ஆடம் யங் இசைக்குழு ஆவ்ல் சிட்டி, தனது ஆல்பமான மொபைல் ஆர்கெஸ்ட்ராவின் அட்டைப்படத்தின் டைம்லேப்ஸ் வீடியோவிற்கான விளம்பர வரைபடத்தை உருவாக்கும்படி அவரிடம் கேட்டது. தொடர்ந்து பல விளம்பர ஓவியங்கள் வரிசைக்கட்டின.தொடர்ந்து 2022ல் சோனி பிக்சர்ஸ் உருவாக்கிய பிரம்மாண்ட திரைப்படமான ‘தி வுமன் கிங்’ திரைப்படத்தின் 5 முன்னணி நடிகர்களை ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும், கைகளையும் கொண்டு வரைந்து கேட்டனர். இதுதான் அவர் இன்னும் உலக பிரபலமாக மாற பாதை வகுத்தது. இப்போது முழு நேரமாக பல உலக சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் ராஜாசென்னா இப்போது அடுத்தக்கட்டமாக கண்காட்சிகளில் வித்தியாசமான மூளை செயல்பாடு கொண்ட மனிதர் என
காட்சிப்படுத்தப்பட்டும் வருகிறார்.

  • ஷாலினி நியூட்டன்

The post ஒரே நேரத்தில் ஆறுக்கும் மேலான ஓவியங்கள்… அசத்தும் ராஜாசென்னா! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...